uttarpradesh girl found in woods without lung

உத்தரப்பிரதேசத்தில் 6 வயது சிறுமியை கொலை செய்து நுரையீரலை வெட்டி எடுத்த கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

Advertisment

உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் அருகே உள்ள கிராமத்தில் பரசுராம் மற்றும் அவரது மனைவி வசித்து வருகின்றனர். கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணமான இவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. எனவே, பெண்குழந்தை ஒன்றின் நுரையீரலை வைத்து பூஜைகள் செய்தால் குழந்தை பிறக்கும் என ஒருவர் கூறியதை நம்பி, அப்பகுதியில் வசிக்கும் பெண் குழந்தை ஒன்றை இவர்கள் நுரையீரலுக்காக கொன்றுள்ளனர்.

Advertisment

அப்பகுதியில் வசிக்கும் அன்குல் மற்றும் பீரான் என்பவர்களிடம் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து, சிறுமி ஒருவரின் நுரையீரலை கொண்டுவரும்படி கூறியுள்ளனர். அவர்கள் இருவரும் தீபாவளியன்று இரவு அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஒருவரை கடத்தி சென்று, சிறுமியைக் கொன்று நுரையீரலை எடுத்துள்ளனர். நேற்று வனப் பகுதியிலிருந்து கொலை செய்யப்பட்ட 6 வயது சிறுமியின் உடலை காவல்துறையினர் கண்டெடுத்தனர். இதன்பிறகு நடந்த விசாரணையில் அன்குல் மற்றும் பீரான் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வாக்குமூலத்தின்படி, குழந்தையின் நுரையீரலுக்கு பணம் கொடுத்த பரசுராம் மற்றும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ப்ரஜேஷ் ஸ்ரீவட்சவா, ‘குடிபோதையில், முதலில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய அன்குல் மற்றும் பீரான் முயன்றுள்ளனர். பின்னர் கொலை செய்து சிறுமியிடமிருந்து வெட்டி எடுத்த நுரையீரலை மாந்திரீகம் செய்வதற்காக பரசுராம் குரில் என்பவரிடம் அவர்கள் கொடுத்துள்ளனர். பரசுராமும், அவரது மனைவியும் நேற்று காலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து பரசுராமின் மனைவிக்கு தெரிந்திருந்தும் யாரிடமும் சொல்லாததன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடக்கத்தில் பரசுராம், காவல்துறையை ஏமாற்றப் பார்த்தார். பின்னர், தீவிரமாக விசாரணை நடத்தியநிலையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்" எனத் தெரிவித்துள்ளார். மூடநம்பிக்கை மற்றும் 1000 ரூபாய்க்காக ஒரு சிறுமியின் உயிர் பறிக்கப்பட்டிருப்பது பலரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.