உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. நேற்று மாநிலத்தில் முதல்வர் புஷ்கர் சிங் தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர், “2022 தேர்தலின் போது உத்தரகாண்ட் மக்களுக்கு பா.ஜ.க ஆட்சி அமைந்தால் பொது சிவில் சட்டம் செயல்படுத்தப்படும் என்று நாங்கள் உறுதியளித்திருந்தோம். நாங்கள் அதைக் கொண்டு வந்தோம், வரைவுக் குழு அதை வரைந்து நிறைவேற்றியது. பின்னர், மாநில ஆளுநரும், குடியரசுத் தலைவரும் பொது சிவில் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தனர். அதனை தொடர்ந்து, அது ஒரு சட்டமாக மாறியது. தற்போது அதற்கான பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. நேற்று அமைச்சரவையில் அதைப் பகுப்பாய்வு செய்து விவாதித்தோம். தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். நாம் ஒரு முன்னுதாரணத்தை அமைத்து வருவதால், அனைத்து கருத்துக்களையும் பரிசீலனை செய்து முழுமையாக ஆராய்ந்த பிறகு, பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று கூறினார்.
புஷ்கர் சிங் தாமி மாநில முதல்வராகப் பொறுப்பேற்ற போது மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து, மாநிலத்தில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், பொது சிவில் சட்ட மசோதாவை தயாரிக்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 5 பேர் கொண்டு குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இந்த குழுவினர், பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வரைவு மசோதாவை தயார் செய்து முதல்வரிடம் அறிக்கையாகத் தாக்கல் செய்தனர். இந்த வரைவு மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இதனையடுத்து, இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக கடந்தாண்டு பிப்ரவரி மாதம், உத்தரகாண்ட் சட்டசபையில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி செய்தார். இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடந்த நிலையில், உத்தரகாண்ட் சட்டசபை வளாகப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், வளாகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டும் இந்த பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 3 நாள் விவாதத்துக்குப் பின் கடும் எதிர்ப்பையும் மீறி ஆளும் பா.ஜ.க அரசு உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்ட மசோதா கடந்தாண்டு பிப்ரவரி 7ஆம் தேதி நிறைவேற்றியது. இதன் மூலம், நாட்டின் முதல் மாநிலமாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தின்படி, பலதார திருமணத்துக்கு உத்தரகாண்ட் மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டது. மறுமணம், விவாகரத்து குறித்து பொது விதிகளை அமல்படுத்தியது. திருமணங்களை போன்று, லிவ்-இன் உறவில் இருக்க விரும்புவோர், மாநில அரசிடம் பதிவு செய்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டது. அப்படி பதிவு செய்யத் தவறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, திருமணம் செய்யத் தடை விதிக்கப்பட்ட உறவுகள் என்ற பிரிவில், தந்தை சகோதரியின் மகன்/மகள் ( அத்தை மகன்/மகள்) மற்றும் தாய் சகோதரரின் மகன்/மகள் (தாய்மாமன் மகன்/மகள்) என்ற உறவுமுறையும் இடம்பெற்றது. இந்த உறவு முறையில் திருமணம் செய்வோர் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பொது சிவில் சட்ட மசோதா உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டாலும், அது சட்டமாக இன்னும் அமல்படுத்தப்படவில்லை.
பொது சிவில் சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பும், ஒரு தரப்பினரின் ஆதரவும் நிலவி வருகிறது. இந்தியாவில் வசிக்கும் சிறுபான்மையினர், பொது சிவில் சட்டத்தை தங்களது உரிமைகளைப் பறிக்கும் ஒன்றாகவே கருதுகிறார்கள். இந்த பொது சிவில் சட்டத்தை திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, குழந்தைகளைத் தத்தெடுப்பது உள்ளிட்ட பல்வேறு தனி நபர் உரிமைகள் தொடர்பாக அந்த நபர்களின் மதத்திற்கு ஏற்ப இயற்றப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.