Uttarakhand becomes first state to file uniform Civil code Bill

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதலே விவாதிக்கப்பட்டு வரும் சட்டம், பொது சிவில் சட்டமாகும். இந்த சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பும், ஒரு தரப்பினரின் ஆதரவும் நிலவி வருகிறது. இந்தியாவில் வசிக்கும் சிறுபான்மையினர், பொது சிவில் சட்டத்தை தங்களது உரிமைகளை பறிக்கும் ஒன்றாகவே கருதுகிறார்கள்.

இந்த பொது சிவில் சட்டத்தை திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, குழந்தைகளை தத்தெடுப்பது உள்ளிட்ட பல்வேறு தனி நபர் உரிமைகள் தொடர்பாக அந்த நபர்களின்மதத்திற்கு ஏற்ப இயற்றப்பட்டிருக்கிறது. நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதி அளித்து வந்த பாஜக, இன்று பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. இதனையொட்டி பாஜக அரசு, பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முயற்சியெடுக்கும் என்றே கருதப்படுகிறது.

அந்த வகையில் உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா இன்று (06-02-24) தாக்கல் செய்யப்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மீண்டும் மாநில முதல்வராக பொறுப்பேற்ற போது மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார்.

Advertisment

இதனைத்தொடர்ந்து, 2 ஆண்டுகளுக்கு முன் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், பொது சிவில் சட்ட மசோதாவை தயாரிக்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 5 பேர் கொண்டு குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

இந்த குழுவினர், பல்வேறு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வரைவு மசோதாவை தயார் செய்து முதல்வரிடம் அறிக்கையாக தாக்கல் செய்தனர். இந்த வரைவு மசோதாவுக்கு மசோதாவுக்கு மாநில அமைச்சரவை கடந்த 4ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து, பொது சிவில் சட்ட மசோதாவை உத்தரகாண்ட் சட்டசபையில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று (06-02-24) தாக்கல் செய்தார். இந்த பொது சிவில் சட்ட மசோதா மீது உத்தரகாண்ட் சட்டசபையில் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த பொது சிவில் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்திலும் பதற்றம் நிலவுகிறது. அதனால், உத்தரகாண்ட் சட்டசபை வளாகப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், வளாகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்த பொது சிவில் சட்ட மசோதா வாக்கெடுப்பிற்கு பின்னர் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும், மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அந்த மாநிலத்தில் அது சட்டமாக அமலுக்கு வரும். இதன் மூலம், சுதந்திரத்திற்கு பின், நாட்டிலேயே முதல் முறையாக பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் மாநிலமாக உத்தரகாண்ட் மாறும்.