உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்வு இந்த மாதம் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கும்பமேளாவில், இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில் மகா கும்பமேளா க்ஷேத்ராவின் சங்கராச்சாரியார் மார்க்கில் உள்ள செக்டார் 18இல் இன்று (07.02.2025) மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்குக் கொண்டு வரப்பட்டு தீ அணைக்கப்பட்டன. இதன் மூலம் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரயாக்ராஜ் நகர போலீஸ் எஸ்.பி. சர்வேஷ் குமார் மிஸ்ரா கூறுகையில், “தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மகா கும்பமேளா நடைபெறும் இடத்திற்கு அருகே பக்தர்கள் கூடியிருக்கும் இடத்தில் கடந்த 19ஆம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து சுமார் 70 - 80 குடிசைகள் மற்றும் 8 - 10 கூடாரங்கள் எரிந்து நாசமாகின. கடந்த 29ஆம் தேதி மௌனி அமாவாசை (Mauni Amavasya) அன்று புனித நீராட அதிகாலை முதலே லட்சக்கணக்கானோர் திரண்டதால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.