Skip to main content

அயோத்தியில் கட்டுக்கடங்காத கூட்டம்; நெரிசலில் சிக்கி பக்தர்கள் காயம்

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Unruly crowd in Ayodhya; Devotees were in the jam

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ரூ.2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று (22.1.2024) ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார்.

அதன் பிறகு, கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதே சமயம் நேற்று பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், பல நாட்களாக அயோத்தியில் காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். மேலும் நாட்டில் உள்ள பலரும் வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சியில் நேரலையில் பார்த்து மகிழ்ந்தனர். இந்த சூழலில் அயோத்தி ராமர் கோவிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய இன்று (23.01.2024) முதல் அனுமதி அளிக்கப்பட்டது. காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

மேலும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்க ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராமர் கோவிலில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் திணறி வந்தனர். இந்நிலையில் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக அதிகளவில் பக்தர் குவிந்தனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் பலர் காயமடைந்துள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த பக்தர்கள் தூக்குப்படுக்கையில் சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டனர்.

Unruly crowd in Ayodhya; Devotees were in the jam

கூட்டத்தைக் கட்டுப்படுத்த கோவிலுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக கூடுதலாக துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். கோவிலுக்கு வரும் அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள  உள்துறை முதன்மைச் செயலாளர் சஞ்சய் பிரசாத் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி பிரசாந்த் குமார் ஆகியோர் ராமர் கோவில் வளாகத்திற்கு வந்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்