இரண்டாம் கட்ட ஊரடங்கு தளர்வு சமயத்தில் என்னென்ன சேவைகள் செயல்படும், எவையெல்லாம் செயல்படாது என்பது குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாத இறுதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு கரோனா தடுப்பில் நல்ல பலனைக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்து வரும் மத்திய அரசு, ஊரடங்கு தளர்வை நாடு முழுவதும் படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஜூலை 1, முதல் இரண்டாம் கட்ட ஊரடங்கு தளர்வை அறிவித்துள்ள மத்திய அரசு, அதுகுறித்த வழிகாட்டுதல்களையும் அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த வழிகாட்டுதலின்படி,
1) பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் ஜூலை 31 வரை மூடப்படும்.
2) மெட்ரோ ரயில் சேவைகள் அடுத்தகட்ட அறிவிப்பு வரும்வரை செயல்படாது.
3) சினிமா அரங்குகள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பார்கள், ஆடிட்டோரியங்கள் ஆகியவை செயல்படாது.
4) எந்தவொரு சமூக, அரசியல், கல்வி, கலாச்சார அல்லது மத செயல்பாடு கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.
5) 2020 ஜூலை 31 வரை கட்டுப்பாட்டு மண்டலங்களில் ஊரடங்கு தொடரும்.
6) இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். அத்தியாவசிய செயல்பாடுகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
7) உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட சிறப்பு விமானங்களைத்தவிர மற்ற பயணிகளின் சர்வதேச விமானப் போக்குவரத்துக்குச் செயல்படாது.
8) உள்நாட்டு விமானங்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் ஏற்கனவே குறிப்பிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில், சோதனை அடிப்படையில் இந்தச் சேவை விரிவாக்கப்படும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.