உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.
இந்த வன்முறை தொடர்பாக ஆஷிஸ் மிஸ்ரா மற்றும் அவரது ஆதரவாளர்கள் என 14 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, ஆஷிஸ் மிஸ்ராவின் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த சனிக்கிழமை (09.10.2021) வன்முறை தொடர்பாக நடைபெற்ற விசாரணைக்கு ஆஜரான ஆஷிஷ் மிஸ்ராவை 12 மணிநேர விசாரணைக்குப் பிறகு உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இதனையடுத்து நீதிமன்றம் ஆஷிஸ் மிஸ்ராவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நேற்று உத்தரவிட்டது.
இந்தநிலையில் தற்போது ஆஷிஸ் மிஸ்ராவை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதற்கிடையே லக்கிம்பூர் வன்முறையை கண்டித்து இன்று மகாராஷ்ட்டிராவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக்கோரி லக்னோவில் உள்ள காந்தி சிலை முன்பு, பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரசார் மௌன விரத போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.