மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், இந்துக்கள் ஹலால் இறைச்சியை உண்பதை விட்டுவிட்டு, ஒரே ஒரு முறையால் அறுக்கப்பட்ட இறைச்சியை (ஜட்கா) மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
பீகார் மாநிலம், பெகுசாராய் பகுதியில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “மதத்தின் மீது பற்று கொண்டிருக்கும் இஸ்லாமியர்களை நான் மிகவும் மதிக்கிறேன். ஹலால் இறைச்சியை மட்டுமே உட்கொள்ளும் இஸ்லாமியர்களை நான் பாராட்டுகிறேன். இந்துக்களும் இதை புரிந்துகொள்ள வேண்டும். இந்துக்களும் இதே போன்ற உறுதிப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.
இந்துக்கள் ஹலால் இறைச்சியை உண்பதன் மூலம் தங்களை சீரழித்துக் கொள்ளக்கூடாது. அவர்கள் எப்போதும் இந்து வழிபாடான ஒரே முறை அறுக்கப்பட்ட இறைச்சியை (ஜட்கா) மட்டும் உட்கொள்ள வேண்டும்” என்று கூறினார். இது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பீகாரில் ஹலால் பொருட்களை தடை செய்யுமாறு கடந்த நவம்பர் மாதத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், சில தினங்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.