நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டது, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளை புதுச்சேரி மற்றும் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு நீட்டிப்பதற்கான மசோதாக்கள் மக்களவையில் கடந்த 12ம் தேதி நிறைவேற்றப்பட்டது, குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவு வாபஸ் பெறப்பட்டது எனப் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல், நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான கடந்த 13 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ணப் புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசி அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோடியவர்களைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் வந்து, பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட 15 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்தியா கூட்டணியில் உள்ள யாருக்காவது தைரியம் இருந்தால் வாரணாசிக்கு சென்று பிரதமர் மோடியுடன் சண்டையிடுங்கள். நாடாளுமன்ற அத்துமீறல் பிரச்சனையை எழுப்புவதற்கான காரணம் இந்தியா கூட்டணியினர் அவர்கள் செய்த குற்றத்தை மறைப்பதற்கான கண்துடைப்பாகும். பீகார் முதலமைச்சருக்கும், அல்லது ஜனதா தளம் கட்சியில் இருக்கும் உள்ள தலைவர்களுக்கும் நான் சவால் விடுகிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால் வாரணாசிக்கு சென்று பிரதமர் மோடியுடன் சண்டையிடுங்கள்” என்று கூறினார்.