இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. இந்த நிலையில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், "புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்வதை அனுமதிக்க வேண்டாம். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு ரயில்களுக்கு அனுமதி தர வேண்டும். நடந்து செல்பவர்களை மீட்டு முகாம்களில் தங்கவைத்து உணவு, தண்ணீர் வழங்க வேண்டும். மாநிலங்களில் கிளினிக், நர்சிங் ஹோம்கள் திறந்திருக்க வேண்டும். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் பாதுகாப்பாகத் தங்கள் பணியிடத்திற்குச் செல்ல வழிவகை செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.