அரபிக் கடலில் சமீபத்தில் உருவாகிய டவ்தே புயல், கர்நாடக, கோவா, மஹாராஷ்ட்ரா, குஜராத் ஆகிய மாநிலங்களை கடுமையாக தாக்கியது. இந்தநிலையில் வங்கக்கடலில் நாளை உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வரும் 24 ஆம் புயலாக மாறி 26 ஆம் தேதி ஒடிசா மற்றும் மேற்குவங்கத்திடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்திய வானிலை மையம், புயலின் தாக்கம் ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் அதிகமாக இருப்பதோடு, கிழக்கு கடலோர பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களிலும், அந்தமான்- நிக்கோபார் தீவுகளிலும் பரவலான மழை இருக்மென தெரிவித்துள்ளது. இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் தலைமை செயலாளருக்கும், அந்தமான்- நிக்கோபார் தீவுகளின் நிர்வாகத்திற்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர், கடலோர மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். "மேற்கு கடலோர மாவட்டங்களில் அமைந்துள்ள கரோனா சிகிச்சை மையங்களில் தேவையான ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் இருப்பை உறுதி செய்யவேண்டும். தாழ்வான பகுதிகளில் இருக்கும் சிகிச்சை மையங்கள, மருந்து விற்பனையங்கள் உள்ளிட்டவற்றை, வேறு இடங்களுக்கோ அல்லது மாடிகளுக்கோ மாற்ற வேண்டும்" போன்ற பல்வேறு அறிவுறுத்தல்களை அந்த கடிதத்தில் சுகாதாரத்துறை செயலாளர் வழங்கியுள்ளார்.