கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என கருதப்படும் நிலையில், இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்கள் சார்பில், தடுப்பூசியை இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்தநிலையில், தேசிய சராசரிக்கு மேலாக அதிக தடுப்பூசிகளைப் பல மாநிலங்கள் வீணாக்குவதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, அதில் முதல் ஐந்து மாநிலங்களின் பெயர்களைத் தெரிவித்துள்ளது.
தேசிய அளவில் தடுப்பூசி வீணாகும் சராசரி 6.3% சதவீதமாக இருக்கையில், ஜார்க்கண்டில் தடுப்பூசி வீணாகும் சதவீதம் 37.3 சதவீதமாகவும், சத்தீஸ்கரில் 30.2 சதவீதமாகவும், தமிழ்நாட்டில் 15.5 சதவீதமாகவும், ஜம்மு - காஷ்மீரில் 10.8 சதவீதமாகவும், மத்தியப் பிரதேசத்தில் 10.7 சதவீதமாகவும் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தடுப்பூசி வீணாகும் சதவீதத்தை ஒரு சதவீதத்திற்கு கீழாக வைத்திருக்கும்படி மாநிலங்கள் தொடர்ந்து கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.