Skip to main content

இரண்டு மாநிலங்களில் அதிகரிக்கும் கரோனா - ஆலோசனை நடத்தும் மத்திய அரசு செயலாளர்கள்!

Published on 26/08/2021 | Edited on 26/08/2021

 

corona

 

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், கேரளாவில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கேரளத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் 31,445 பேருக்கு கரோனா உறுதியானது. இது நாட்டில் நேற்று பதிவான கரோனா எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 70 சதவீதமாகும்.

 

அதேபோல் மஹாராஷ்ட்ரா மாநிலத்திலும் சில தினங்களுக்கு பிறகு, தினசரி கரோனா பாதிப்பு நேற்று ஐந்தாயிரத்தை கடந்தது. இதனையடுத்து இரு மாநிலங்களிலும் கரோனா அதிகரித்து வருவது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளரும், மத்திய உள்துறை செயலாளரும் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்த இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

மாலை ஐந்து மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், கேரளா மற்றும் மஹாராஷ்ட்ரா மாநிலங்களை சேர்ந்த தலைமை செயலாளர்களும், மூத்த அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர் எனவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறப்பு விகிதத்தில் திரெளபதி குறித்து பேச்சு; சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Ajitpawar Talk about Draupathi in birth rate

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே அணியின் சிவசேனா கட்சி, காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடவுள்ளன. அதே போல், மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணியில் பா.ஜ.க, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை போட்டியிடவுள்ளன.

இந்த நிலையில், புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர் பகுதியில் மருத்துவர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு அஜித் பவார் கலந்து கொண்டு பேசினார். அதில் பேசிய அவர், “மகாராஷ்டிராவில் உள்ள சில மாவட்டங்களில், ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 850 பெண் குழந்தைகள் என்ற அளவில் பிறப்பு விகிதம் உள்ளது. மேலும், சில இடங்களில் 790 பெண்கள் என்ற அளவிலும் உள்ளன. இது மிகவும் பிரச்சனைக்குரிய விஷயம். இனி வரும் நாட்களில், ‘திரௌபதி’ பற்றி யோசிக்க வேண்டும் போல் தோன்றுகிறது. இதை நகைச்சுவையை பார்க்காதீர்கள். இல்லையேல் நாளை திரௌபதியை அவமதித்ததாக நான் விமர்சிக்கப்படுவேன்” என்று கூறினார்.

இந்து மத புராணக்கதையான மகாபாரத்தில் திரெளபதிக்கு, அர்ஜுன் உள்ளிட்ட 5 சகோதரர்கள் கணவர்களாக இருப்பதாக கதையில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் ஆண் குழந்தைகளுக்கு சம அளவில் பெண் குழந்தைகள் இல்லாததை திரெளபதியை ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

அஜித் பவாரின் இந்த கருத்துக்கு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேந்த ஜிதேந்திர அவாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜிதேந்திர அவாத் கூறியதாவது, “மனதில் விஷம் இருந்தால், அவர் வாயிலிருந்து வேறு என்ன வெளிவரும்? திருமணங்கள் நடக்காது, கேள்விகள் எழும், பிரச்சனைகள் வரும் என்று இன்னொரு உதாரணம் சொல்லியிருக்கலாம். மகாராஷ்டிராவில், பிறப்பு விகித வேறுபாடு எப்போதும் நிலையாக இருந்ததில்லை. திடீரென்று, அவர் மனதிற்கு திரெளபதி தோன்றியுள்ளது.  ஒவ்வொரு முறையும் அவர் இப்படித்தான் பேசுவார். ஆனால், அதற்குண்டான விலையை  சரத் பவார் கொடுக்க வேண்டியிருந்தது” என்று கூறினார்.

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர்.