Skip to main content

தமிழகத்திற்கு ரூபாய் 3,691 கோடி ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு!

Published on 15/06/2021 | Edited on 16/06/2021

 

 

union government released the funds for tamilnadu government

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 2021- 2022 ஆம் ஆண்டுக்கு தமிழகத்திற்கு ரூபாய் 3,691 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

 

இது தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பில், "ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டில் தமிழகத்துக்கான ஒதுக்கீட்டை ரூபாய் 3,691 கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஜல்சக்தி அமைச்சகத்தின் 'தேசிய ஜல் ஜீவன் திட்டம்' தமிழகத்துக்கு முதல் தவணையாக ரூபாய் 614.35 கோடியை வழங்கியுள்ளது. தமிழகத்துக்கு ஜல் ஜீவன் திட்டத்துக்கான ஒதுக்கீட்டை 4 மடங்கு உயர்த்த ஒப்புதல் அளித்துள்ள மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங், 2024- ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராம வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க தமிழகத்துக்கு முழு உதவியும் அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

 

தமிழகத்தில் மொத்தம் உள்ள 1.26 கோடி வீடுகளில், 40.36 லட்சம் வீடுகளுக்கு (31.80 சதவீதம்) குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15- ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கியபோது, 21.65 லட்சம் (17.06 சதவீதம்) வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் கடந்த 22 மாதங்களில் 18.70 லட்சம் (14.74 சதவீதம்) வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 

 

தமிழகத்தில் இன்னும் 86.53 லட்சம் வீடுகள் குடிநீர் குழாய் இணைப்பு இல்லாமல் உள்ளன.இந்தாண்டில் 16.13 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மீதமுள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது மிகப் பெரிய பணியாக இருக்கும். 2024- ஆம் ஆண்டுக்குள் இந்தப் பணியை முடிக்க, கிராமங்கங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதை தமிழகம் 179 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.

 

இந்தாண்டுக்கான செயல் திட்டத்தை தமிழகம் இன்னும் இறுதி செய்யவில்லை. இதை தாமதிக்காமல் இறுதி செய்யும்படி தமிழக அரசை தேசிய ஜல் ஜீவன் திட்டம் கேட்டுக் கொண்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டம் அமல்படுத்தும் பணியை விரைவுபடுத்தும்படி தமிழக முதல்வருக்கு, மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார்." இவ்வாறு மத்திய அரசின் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2020- 2021- ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு ரூபாய் 921.99 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தேர்தல் ஆணையருக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பரபரப்பு கடிதம்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
letter of retired IAS, IPS officers to Election Commissioner
தலைமை தேர்தல் ஆணையர்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இந்நிலையில், தேர்தல் நேரத்தில் மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் என 87 பேர் சார்பில் கூட்டாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், “எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய அரசை கண்டு தேர்தல் ஆணையம் மவுனமாக இருக்கக்கூடாது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324 ஆவது பிரிவின்படி வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர் மற்றும் சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தேர்தல் ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். மத்திய அரசை போல மாநில அரசும் தங்கள் விசாரணை அமைப்புகளை பயன்படுத்தினால் இத்தககைய செயல் அராஜகத்தில் முடியும். இது தேர்தல் நேரத்தில் பெரும் குழப்பங்களை விளைவிக்கும்.

ஊழலை ஒழிப்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே சமயம் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினரை மத்திய அரசு பழிவாங்குவது தவறு. இது குறித்து தேர்தல் ஆணையம் தங்கள் கடமையை மறந்து உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி எழுப்பிய சந்தேகங்களை போக்க தேர்தல் ஆணையம் எந்த முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை. பாஜகவினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது” எனத் தெரிவித்துள்ளனர்.