டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (08/07/2021) மாலை காணொளி மூலம் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பியூஷ்கோயல் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு டெல்லியில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், அனுராக் தாகூர், மாண்டவியா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது, "சுகாதாரத்துறைக் கட்டமைப்பை வலுப்படுத்த ரூபாய் 15,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கரோனா சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்க இரண்டாம் கட்ட தொகுப்புக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. தேங்காய் வாரிய சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தேங்காய் வாரியத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
விவசாய சமூகத்தைச் சேர்ந்தவர் தேங்காய் வாரியத் தலைவராக நியமிக்கப்படுவர். ஆந்திரா, குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தேங்காய் வாரியத்தில் பிரதிநிதித்துவம் தரப்படும். நாட்டில் உள்ள வேளாண் மண்டிகளை மேம்படுத்த ரூபாய் 1 லட்சம் கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது." இவ்வாறு மத்திய அமைச்சர்கள் தெரிவித்தனர்.