
விவசாயிகளின் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம் என மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்குக் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டுள்ள 'டெல்லி சலோ' என்ற மாபெரும் பேரணி பல தடைகளைக் கடந்து நேற்று டெல்லி சென்றடைந்தது. டெல்லியின் புராரி பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில், அமைதியான முறையில் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள சூழலில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து டெல்லியை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.
இதனால், போராட்டக் களங்களும் விரிவடைந்து கொண்டே செல்கின்றன. இந்நிலையில், விவசாயிகளின் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம் என மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் எதிர்க்கட்சிகளை விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், "போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயச் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராகவுள்ளது. டிசம்பர் 3-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்காக விவசாயச் சங்கங்களை அழைத்துள்ளோம். அவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள் என்று நம்புகிறேன். விவசாயிகளின் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.