Skip to main content

''மன்னிக்க முடியாத குற்றம்'' - கொதிக்கும் முன்னாள் முதல்வர்கள்

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

"Unforgivable crime"-Simmering ex- chief ministers

 

டெல்லியில் கடந்த 11 ஆம் தேதி நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர். ஆனால் கர்நாடக அரசு தரப்பிலான அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

 

தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரியில் நீர் திறக்க உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது.

 

"Unforgivable crime"-Simmering ex-prime ministers

 

அதேநேரம் பாஜகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த குமாரசாமியும் கர்நாடகாவில் நீர் திறந்ததற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் முதல்வர் குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டை ஆளும் திமுகவை திருப்திப்படுத்தவும், இந்தியா கூட்டணி ஒற்றுமைக்காகவும் கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்துள்ளது. காங்கிரஸ் பெரிய நாடகத்தை உருவாக்கி கர்நாடகா மக்களை முட்டாளாக்கியுள்ளது. பெங்களூர் நகரம் குடிநீர் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. கர்நாடகத்தின் நிலையை காங்கிரஸ் அரசால் ஏன் உச்ச நீதிமன்றத்தில் விளக்க முடியவில்லை. சட்ட வல்லுநர்களுடனும், எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் விவாதிக்காமல் தமிழ்நாட்டுக்கு நீரை விடுவித்த ரகசியம் என்ன? டி.கே.சிவகுமார் கர்நாடகா அமைச்சரா அல்லது தமிழ்நாட்டுக்கான அமைச்சரா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். நீர்த்தேக்கத்தின் சாவி ஒன்றிய அரசிடம் உள்ளது என கர்நாடக காங்கிரஸ் குறிப்பிடுவதன் அர்த்தம் என்ன' என பல்வேறு கேள்விகளை முன் வைத்துள்ளார்.

 

"Unforgivable crime"-Simmering ex-prime ministers

 

ஏற்கனவே காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறக்க கூடாது என கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் மூலமாக வலியுறுத்தியிருந்த முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, மீண்டும் இரண்டாவது முறையாக காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இரண்டாவது முறையாக அவர் சித்தராமையாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'குறுவை சாகுபடிக்காக தமிழக அரசு இரண்டு மடங்கு தண்ணீரை பயன்படுத்தி உள்ளது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு இதை முறையிட்டிருக்க வேண்டும். மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்த காரணத்திற்காக காவிரியில் இருந்து நீர்  திறந்து விடப்பட்டிருப்பது கர்நாடக அரசு செய்த மன்னிக்க முடியாத குற்றம். கர்நாடக விவசாயிகளுக்கு முதலில் தண்ணீரை திறந்து விடாமல் அணையில் சேர்த்து வைத்த தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து வைத்துள்ளனர். காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என முதலமைச்சர் சித்தராமையா சொன்ன மறுநாளே துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கட்டுப்பாட்டில் இருக்கும் நீர்வளத்துறை காவிரி நீரை திறந்து விட்டுள்ளது. கர்நாடகத்தின் உண்மை நிலையை உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தெளிவுபடுத்த வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்