டெல்லியில் சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் உறங்கிக் கொண்டிருந்தவர்களின் மீது அவ்வழியே வந்த லாரி ஏறியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் சீமாபுரி பகுதியில் உள்ளது டெல்லி போக்குவரத்து கழக பணிமனை. அந்த பணிமனையின் அருகே உள்ள பிரதான சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் சிலர் உறங்கியுள்ளனர். அந்த சாலையில் அதிவேகமாக வந்த லாரி ஒன்று நிலை தடுமாறி சுவரில் உறங்கிக் கொண்டிருந்த 6 பேர் மீது ஏறியுள்ளது.
தகவல் அறிந்து அந்த பகுதிக்கு விரைந்த போலீசார் அவர்களை அருகில் இருந்த ஜிடிபி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் விபத்தின் போதே இரண்டு பேர் இறந்துள்ளது தெரியவந்தது.
டிஜிபி சத்யாசுந்தரம் கூறுகையில் “படுகாயமடைந்த இருவரில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே உயிரிழந்ததாகவும் சிகிச்சையின் போது ஒருவர் உயிரிழந்தாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்” எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், காவல்துறை இறந்தவர்களின் குடும்பத்தை தொடர்பு கொள்ள முயற்சிப்பதாகவும் தனிப்படை அமைக்கப்பட்டு விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநரை தேடி வருவதாகவும் கூறினார். 6 பேரில் நால்வர் உயிரிழந்த நிலையில் 2 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.