மாநிலங்களவையில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஜி.சி.சந்திரசேகர் பேசும் போது மத்திய அரசின் வேலை சம்மந்தப்பட்ட தேர்வுகள் மற்றும் வங்கி தேர்வுகளை ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளுடன் கன்னட மொழியில் ஏன் தேர்வுகள் நடத்தக்கூடாது என கேள்வி எழுப்பினார். உறுப்பினரின் கேள்விக்கு மாநிலங்களவையில் பதிலளித்த மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தென்மாநில எம்பிக்கள் பலரும் தன்னை நேரில் சந்தித்து மத்திய அரசின் வேலை வாய்ப்பிற்க்கான தேர்வுகளை மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை குறித்து தனது அமைச்சகம் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், பல்வேறு கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மத்திய அரசு வேலை வாய்ப்பிற்க்கான தேர்வுகளை, மத்திய அரசை சார்ந்த பல்வேறு அமைப்புகளும் தேர்வை நடத்தி வருவதால், அவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டியுள்ளது. இது தொடர்பான இறுதி முடிவை நாடாளுமன்றத்தில் விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவையில் தெரிவித்தார். மாநில மொழிகளில் மத்திய அரசின் வேலை வாய்ப்பிற்க்கான தேர்வுகளை மத்திய அரசு நடத்தும் பட்சத்தில், தமிழகம் உட்பட தென்மாநில இளைஞர்கள் அதிக அளவில் மத்திய அரசு பணியில் சேர வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.