தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மே 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது, அதில் தமிழகத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்முறையாக முதலமைச்சராக பதவியேற்று முதல் கையெழுத்தாக ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.
அதில் ஒன்றான அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் கரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்கப்படும் என்ற உத்தரவு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது அதேபோல் புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 3000 ரூபாய் கரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் மூலம் 3 லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.