புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ‘நாரி சக்தி வந்தன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவின்படி இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த இட ஒதுக்கீட்டுச் சட்டம் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி, இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு, நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன் பிறகு, மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த சட்டம் அமலுக்கு வரும் என அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் அமலுக்கு வராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நேற்று தொடங்கி நடைபெற்றது.
இந்த விவாதத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “ பெண்களைக் காலகாலமாக நாம் வஞ்சித்து வந்திருக்கிறோம். எக்காலத்திலும் மன்னிக்க முடியாத பெரும் பாவத்தை இழைத்திருக்கிறோம். கல்வியை மறுத்திருக்கிறோம். அதிகாரத்தை பறித்திருக்கிறோம். அவர்களுக்கு கருத்துரிமை இல்லை. சொத்துரிமை இல்லை. இப்படி பல்வேறு வகைகளில் பெண்கள் ஒடுக்கப்பட்டார்கள். வீட்டிலேயே முடக்கப்பட்டார்கள்.
பிறக்கிற முதல் இறக்கிற வரை அவர்கள் ஆண்களையே நம்பி வாழ வேண்டும் என்கிற சமூக அமைப்பை இந்த மண்ணில் நாம் உருவாக்கியிருக்கிறோம். அது தான், நமது குடியரசுத் தலைவரை புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு அழைப்பதற்கான தயக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு பெண்ணை அதிகாரத்தில் அமரவைத்து, அவர்களை செயல்படவிடாமல் தடுப்பது என்பது பாவத்திலும் பெரும் பாவம் ஆகும். அந்த வகையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டுவந்து நடைமுறைப்படுத்துவதற்கு வாய்ப்பில்லாத ஒரு சூழலையும் இன்றைக்கு இந்த அரசு உருவாக்கியிருக்கிறது. தற்போது நிறைவேற்றப்படும் இந்த மசோதா நடைமுறைக்கு வருமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலுக்காகவும், மகளிரின் வாக்கு வங்கிக்காகவும் நாடகமாடும் அரசியலாக தான் இதை நான் பார்க்கிறேன்” என்று பேசினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி பாண்டியன், “இந்த முன் முயற்சியை நாங்கள் பாராட்டினாலும், சில அச்சங்களும் சந்தேகங்களும் இதில் உள்ளன. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா உரிமையான ஒரு விஷயம். அது தயவுக்குரிய விஷயம் அல்ல. இட ஒதுக்கீடு என்பது பிறப்பு உரிமை. இந்த மசோதாவில் மாற்றுத் திறன் பெண்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு இல்லை. அதே போல், மாநிலங்களவை மற்றும் மாநில சட்ட மேலவையிலும் ஒதுக்கீடு இல்லை. தொகுதி மறுவரையறை நடைமுறைக்கு பின்பு தான் மசோதா அமல்படுத்தப்படும் என்று கூறுவது கற்பனையான வாக்குறுதி. முயலுக்கு முன்னால் கேரட்டை வைத்து கவர்ந்திழுப்பது போல், மகளிர் இட ஒதுக்கீட்டை வைத்து பெண் வாக்காளர்களை கவர்ந்திழுக்கிறீர்கள். ஆனால், இந்திய பெண்கள் மிகவும் புத்திசாலிகள். எது சரி? எது தவறு? என்பதை புரிந்து கொண்டு வாக்களிப்பார்கள்” என்று கூறினார்.