“நாடு வளர்கிறது என்பதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்கின்றனர்” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ஆம் தேதி துவங்கியது. இந்தக் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 20க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் எம்.பி அணுமுலா ரேவந்த் ரெட்டி பேசினார். அப்போது, இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறது. இதை அரசு அறிந்துள்ளதா? 2014ல் ரூபாய் மதிப்பு சரிந்தபோது இந்திய ரூபாய் மதிப்பு அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகப் பிரதமர் மோடி கூறியதைச் சுட்டிக்காட்டி ரேவந்த் ரெட்டி கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் போல் வலுவாகவே உள்ளது. டாலர் மதிப்பு ஊசலாட்டத்தைத் தவிர்க்க ஆர்பிஐ அந்நிய செலாவணியைப் பயன்படுத்தி தீர்வு காண முயன்று வருகிறது. நம் நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக வளரும் ஒன்று எனப் பிற நாடுகளின் அமைப்புகள் கூறுகின்றன. இது இங்குள்ள சிலருக்குப் பொறாமை. நாடு வளர்கிறது என்பதைக் கேட்டு பெருமிதம் கொள்ளவேண்டாமா? அதை விடுத்து இந்தக் கருத்தை ஒரு நகைச்சுவை போல் எடுத்துக்கொள்கிறார்கள்” என்றார்.