Skip to main content

“புதுச்சேரியில் மூன்றாம் அலை தொடக்கம் இருக்கக் கூடாது..” - துணைநிலை ஆளுநர் தமிழிசை

Published on 17/07/2021 | Edited on 17/07/2021

 

"There should not be a third wave in Puducherry." - Deputy Governor Tamilisai

 

சுகாதார குறியீடுகளில் புதுச்சேரி மாநிலம் முன்னோடியாக திகழ்கிறது. ஆண்டுதோறும் ஜூலை மாதம் டெங்கு ஒழிப்பு மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி அரசு சுகாதார நலத்துறையின் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் சார்பில் இந்த ஆண்டும் டெங்கு எதிர்ப்பு மாதம் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இதனையொட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை எதிரில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமையும் விழிப்புணர்வு பேரணியையும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கிவைத்தார். தாரை தப்பட்டைகள் முழங்க, டெங்கு கொசு வேடமிட்ட நபர் முக்கிய சாலைகளில் நடந்து சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சிக்கு சுகாதாரத்துறைச் செயலாளர் அருண் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். கொசு ஒழிப்பு ஆராய்ச்சி மைய இயக்குநர் அஸ்வினி குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

அதனைத் தொடர்ந்து கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதிகொண்ட தற்காலிக சிகிச்சை மையத்தையும் தமிழிசை தொடங்கிவைத்தார்.

 

"There should not be a third wave in Puducherry." - Deputy Governor Tamilisai

 

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “புதுச்சேரி மக்கள் கொசுவோடு வாழக் கூடாது என்பதற்காகத்தான் சுகாதாரத்துறை இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது. நாம் ஒருவரை ஒருவர் விரட்ட போராடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதைவிட மோசமானது டெங்கு. அத்துடன் ஜிகா வைரஸ் பரவுகிறது. எனவே கொசுக்களை நாம் மறந்துவிடக்கூடாது. மழைக் காலம் நெருங்கிவிட்டதால் டெங்கு, மலேரியா ஒழிப்பில் கவனம் செலுத்த வேண்டும். சுற்றுப்புறத்தை சுகாதாரமாக, சுத்தமாக வைத்திருந்தால்தான் நோய்களைத் தடுக்க முடியும். கொசுக்களை ஒழிப்பதால் டெங்கு மட்டுமின்றி, மலேரியா, யானைக்கால் நோய், ஏ.டி.எஸ் கொசுவால் பரவும் வைரஸ் ஆகியவற்றையும் கட்டுப்படுத்த முடியும்.

 

புதுச்சேரியில் கரோனா கட்டுப்பாடு மிகத் தீவிரமாக செயல்பட்டுவருகிறது. குழந்தைகளுக்கு அதிகமாக இருப்பதாக தகவல் பரவி மக்களிடம் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளைப் பாதுகாக்க தேவையான அனைத்து வசதிகளையும் சுகாதாரத்துறை தயார் நிலையில் வைத்திருக்கிறது. எனவே பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை. இருப்பினும் அவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது மிக அவசியம். மழைக்காலங்களில் குழந்தைகளுக்கு நோய்த்தொற்றுகள் அதிகம் வரும்.

 

புதுச்சேரியில் மூன்றாம் அலை தொடக்கம் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில்தான் நாம் தீவிரமாக களப்பணியாற்றிவருகிறோம். குழந்தைகளைத் தேவையின்றி வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம். ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டிருப்பது அவரவர் பொருளாதார மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்குத்தானே தவிர, அனைவரும் சுதந்திரமாக வெளியே சுற்றித் திரிவதற்காக அல்ல என்பதை அனைவரும் கருத்தில்கொள்ள வேண்டும்.

 

பள்ளிகளைத் திறக்க தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் இருந்துவந்த கோரிக்கைகளைப் பரிசீலித்து முதலமைச்சர் பள்ளிகள் திறப்பு முடிவை ஒத்திவைத்திருப்பது பாராட்டுக்குரியது. புதுச்சேரியில் சுமார் 50 சதவீதம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15க்குள் கரோனா இல்லா மாநிலமாக புதுவையை மாற்ற வேண்டும். அதற்கான முயற்சிகளையும் சுகாதாரத்துறை மேற்கொண்டுவருகிறது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்