சமீபமாக தேர்தல் வாக்குறுதிகளில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச திட்டங்கள் குறித்த வாக்குறுதிகளை வழங்குவது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் ஏற்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அரசு அதிகாரிகள் இதுகுறித்து பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தி இருந்தனர். அதேபோல் நீதிமன்றங்களில் நடைபெற்ற வழக்குகளிலும் இது தொடர்பாக நீதிபதிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அக்கடிதத்தில் வரும் 19ஆம் தேதிக்குள் அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதிகளை தேர்தல் சமயத்தில் கொடுக்கும் போது அவற்றை செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரம் இருக்கிறதா என்பது குறித்த விவரங்களை கொடுக்க வேண்டும் என கருதுவதாகவும், இதுகுறித்த கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.