ஜம்மு காஷ்மீரை நாட்டிலேயே மிக அமைதியான இடமாக மாற்ற விரும்புவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் கடைசி நாளான நேற்று பாரமுல்லா பகுதியில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “பயங்கரவாதத்தை ஒழித்து ஜம்மு காஷ்மீரை அமைதியான இடமாக மாற்ற வேண்டும் என்பதே மோடி அரசின் விருப்பம். தீவிரவாதம் இங்கு முற்றிலுமாக வேரறுக்கப்படும். நாட்டின் சொர்க்கமாக ஜம்மு காஷ்மீர் மாறுவது உறுதி. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கிராமத்தில் எத்தனை கிராமத்தில் மின்சாரம் இருக்கிறது என அறிய விரும்புகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளில் காஷ்மீரில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கியுள்ளதை உறுதி செய்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சிலர் சொல்லுகிறார்கள், எதற்காக அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். நாங்கள் பாகிஸ்தானுடன் பேச மாட்டோம். பாரமுல்லா மக்களுடன் மட்டுமே பேசுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.