மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டமாக 430 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஆறாம் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் (25-05-24) 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-05-24) மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.
மொத்தம் 40 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் ஆறாம் கட்டமாக 8 தொகுதிகளில் மே 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கிடையில், சில நாட்களாக பல நாட்களாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும், பா.ஜ.கவினருக்கும் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல் வெளியாகி வந்தது.
இந்த நிலையில், இந்த வன்முறை சம்பவத்தில் பா.ஜ.க கட்சியினர், தங்களின் பெண் தொண்டரில் ஒருவரான ரோட்டிபாலா ஆரி மர்மமான முறையில் உயிரிழந்து விட்டதாகவும், ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறி பா.ஜ.க.வினர் இன்று (23-05-24) நந்திகிராம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், டயர்களை எரித்தும், கடை உட்பட பல இடங்களில் தீ வைத்தும் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது குறித்து மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் சுபேந்து அதிகாரி கூறுகையில், “முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக்கின் தூண்டுதலின் நேரடி விளைவுதான் இது. அவர்கள் தோல்வி நெருங்கி விட்டது என்று தெரிந்தும் இந்தக் காட்டுமிராண்டித்தனமான கொலையைத் திட்டமிட்டுள்ளனர். பா.ஜ.க முடிவு காணும். சட்டரீதியாக பழிவாங்கப்பட்டு, ஜனநாயக ரீதியாக தகுந்த பதில் அளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.