நிலத்தகராறு விவகாரம் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையின் போது பெண்ணை எட்டி உதைத்த ஆளுங்கட்சி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் மண்டல தலைவராக இருப்பவர் இம்மாடி கோபி. இவரிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவிலான நிலத்தை ரூ.33 லட்சத்திற்கு பெண் ஒருவர் விலைக்கு வாங்கியுள்ளார். ஆனால், இம்மாடி கோபி நிலத்தை வாங்கியதற்கான பத்திரத்தை அந்தப் பெண்ணிடம் வழங்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை தான் வாங்கிய நிலத்திற்கான பத்திரத்தை வழங்குமாறு, தனது உறவினர்களுடன் சேர்ந்து இம்மாடி கோபியிடம் அந்தப் பெண் முறையிட்டுள்ளார். அப்போது, கூடுதல் பணம் வழங்குமாறு வலியுறுத்திய இம்மாடி கோபி, அந்தப் பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பெண் தனது காலணியால் இம்மாடி கோபியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து, இம்மாடி கோபி அந்தப் பெண்ணை நெஞ்சில் எட்டி உதைத்து விரட்டியுள்ளார்.
இதையடுத்து, அந்தப் பெண்ணுடன் சென்றிருந்தவர்கள் இம்மாடி கோபிக்கு சொந்தமான பகுதியை சூறையாடினர். இந்த விவகாரத்தில் பெண்ணைத் தாக்கிய வழக்கில் இம்மாடி கோபி மீதும், பொருட்சேதம் ஏற்படுத்திய பெண் மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.