
தெலுங்கானா மாநிலத்தில் பட்டியல் சமூகத்தினருக்கு அரசுப் பணி மற்றும் கல்விக்காக 15% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீடு முறையை நியாயமாக பிரித்துக்கொள்ளும் வகையில் பட்டியல் சமூகத்தினரை வகைப்படுத்துமாறு ஓய்வுபெற்ற நீதிபதி சமீம் அக்தர் தலைமையில் குழு ஒன்றை கடந்தாண்டு அக்டோபர் மாதம் தெலுங்கானா மாநில அரசு அமைத்தது.
இந்த குழு மாநிலத்தில் உள்ள பட்டியல் சமூகத்தினரின் மக்கள் தொகை, கல்வியறிவு, உயர் கல்வி வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் பங்கேற்பு போன்றவற்றை பகுப்பாய்வு செய்து 59 பட்டியல் சமூகங்களை 3 பிரிவுகளாக பிரித்து இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அறிக்கையை அரசுக்கு சமர்பித்தது. அந்த அறிக்கையில், சமூக ரீதியாக, பொருளாதார மற்றும் கல்வி ரீதியாக பின்திங்கிய 15 பட்டியல் சமூகங்களை உள்ளடக்கிய குழு-Iக்கு 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையிலும், மிதமான பயனடைந்த 18 பட்டியல் சமூகங்களை உள்ளடக்கிய குழு- IIக்கு 9 சதவீத இடஒதுக்கீழு வழங்கும் வகையிலும், கணிசமான பயனடைந்த 26 பட்டியல் சமூகங்களை உள்ளடக்கிய குழு- IIIக்கு 5 இடஒதுக்கீடு வழங்கும் வகையிலும் வகைப்படுத்தப்பட்டது. அந்த அறிக்கையை தெலுங்கானா மாநில அரசு ஏற்று கொண்டு, கடந்த மாதம் மாநில சட்டமன்றத்தில் இது தொடர்பான மசோதாவை நிறைவேற்றியது. அதன் பிறகு, இந்த மசோதா சட்டமாக்கபடுவதற்காக அந்த மசோதா மாநில ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவுக்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்தார்.
இந்த நிலையில், சட்டமேதை பாபாசாகேப் அம்பேத்கருடைய 135 பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி, பட்டியல் சமூகத்தினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை வகைப்படுத்தி வழங்கும் மசோதா அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டது. இது குறித்து மாநில நீர்ப்பாசன துறை அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி தெரிவித்துள்ளதாவது, “நாங்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அரசாங்க உத்தரவை வெளியிட்டு, முதல் பிரதியை முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியிடம் ஒப்படைத்துள்ளோம். பட்டியல் சமூக வகைப்பாடு என்பது அனைத்து கட்சிகளாலும் சட்டமன்றத்தில் நீண்டகாலமாக விவாதிக்கப்பட்ட ஒரு விஷயமாக இருந்து வருகிறது.
ஆனால், எந்த அரசும் அதன் மீது செயல்பட தைரியமோ அல்லது அர்ப்பணிப்போ கொண்டிருக்கவில்லை. எங்கள் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தான், இந்த செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பட்டியல் சமூகத்தினரை வகைப்படுத்தியதில் நாட்டிலேயே முதல் மாநிலமாக தெலுங்கானா மாநிலம் மாறி இருக்கிறது. 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பில் பட்டியல் சமூகத்தினரின் மக்கள் தொகை அதிகரித்தால், அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்குவோம்” எனத் தெரிவித்துள்ளார்.