![A teenager who bit a calf while drunk and drank the blood](http://image.nakkheeran.in/cdn/farfuture/QreIw-K-KiLFbGWnImJC7aDmrsYTOFcRIuj4uui1xMg/1721383497/sites/default/files/inline-images/calfni.jpg)
ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம் ஒண்டிப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (29). இவர் மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. சம்பவம் நடந்த அன்று, சுப்பிரமணி மது குடித்துவிட்டு அந்த பகுதியில் சுற்றித் திரிந்தார்.
அப்போது, அங்கு மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு கன்றுக்குட்டியின் கழுத்தை திடீரென கடித்து அதன் ரத்தத்தை குடித்தார். மேலும், கன்றுக்குட்டியைப் பல இடங்களில் கடித்து ரத்தத்தைக் குடித்ததில், படுகாயமடைந்து கன்றுக்குட்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள், சுப்புரமணியைப் பிடித்து அங்குள்ள மரத்தில் கட்டிப்போட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கூடுபள்ளி போலீசார், கன்றுக்குட்டியை கொடூரமாக கடித்து ரத்தத்தைக் குடித்த சுப்பிரமணியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.