பாரத ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியை வரவேற்க, கர்நாடகாவில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், போஸ்டர்கள் கிழித்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, 3,500 கிலோ மீட்டர் தூர ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரில் தனது நடைப்பயணத்தைத் தொடங்கிய ராகுல் காந்தி, நாளை (30/09/2022) முதல் கர்நாடகாவில் இருந்து பயணத்தை தொடங்குகிறார்.
இதனையடுத்து, சமராஜ் நகர் மாவட்டம், குண்ட்லுபெட் நகரில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்களின் படங்களுடன் ஏராளமான வரவேற்பு பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், 40 பேனர்கள் கிழித்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த சதி செயலின் பின்னணியில் பா.ஜ.க.வினர் இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.