Skip to main content

“முதல்வருக்கு அதிருப்தி இருந்ததால் நீக்கினார்”  - பெண் அமைச்சர் ராஜினாமா குறித்து  தமிழிசை செளந்தரராஜன்

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

Tamilisai Soundarararjan says about resignation of the women's minister

 

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில், புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் ரங்கசாமி உட்பட நான்கு அமைச்சர்கள் பதவி வகித்து வருகின்றனர். காரைக்கால் நெடுங்காடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான சந்திர பிரியங்காவுக்கு போக்குவரத்துத் துறை, ஆதி திராவிடர் நலம், வீட்டு வசதி உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டு அமைச்சராகச் செயல்பட்டு வந்தார். 

 

இந்நிலையில், திடீரென அவர் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். மேலும், அந்தக் கடிதத்தில் அவர், “தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வந்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் எனப் பொதுவாக கூறுவார்கள். தலித், பெண் என இரு பெருமைகளோடு இருந்த எனக்கு அதுதான் மற்றவர்களின் உறுத்தல் என்பது தெரியாமல் போனது” எனக் குறிப்பிட்டு தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்திருந்தார். இந்த விவகாரம் புதுச்சேரி அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

 

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சந்திர பிரியங்காவின் பணியில் தொய்வு இருக்கிறது, அவரது பணியில் திருப்தி இல்லை என்று அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி விரும்பினார். ஆனால், ஒரே ஒரு பெண் அமைச்சர் தான் இருக்கிறார் என்பதால் அவரை அழைத்து பேசி பணியாற்ற சொல்லுங்கள் என்று அப்பொழுதே நான் முதல்வரிடம் கூறினேன். 

 

ஏனென்றால் போக்குவரத்து உள்பட அவர் வைத்திருந்த அனைத்து துறைகளுமே முக்கியமான துறை. மறுபடியும் அவரது பணியில் திருப்தி இல்லை என்பதால் அவரை நீக்க வேண்டும் என்று முதல்வர் என்னிடம் கேட்டுக்கொண்டார். முதல்வர் ரங்கசாமி தனது அமைச்சரவையில் ஒரு அமைச்சரை அதிருப்தி காரணமாக தான் அவரை நீக்கி உள்ளார். இந்த விஷயத்தில் நான் ஒன்றும் செய்ய முடியாது. சந்திர பிரியங்கா தான் சாதி ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் பல இன்னல்களை சந்தித்திருப்பதாக கூறியிருக்கிறார். ஆனால், அந்த கட்சியில் சாதி ரீதியாக எந்தவித பிரிவினையும் இருந்தது போல் நான் பார்த்தது இல்லை. 

 

சாதி ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் அவர் பாதிக்கப்பட்டிருந்தால் என்னை போன்றவர்களிடம் கூறியிருந்தால் அதை நான் துணிச்சலாக எதிர்கொண்டிருப்பேன். அவருக்கு நான் பாதுகாப்பாகவும் இருந்திருப்பேன். மாநிலங்களில் தான் ஆளுநரிடம் மனு கொடுத்ததும் உடனடியாக ஏற்கப்படும். ஆனால், புதுச்சேரி என்பது துணை நிலை மாநிலம் என்பதால், மத்திய உள்துறைக்கு அனுப்பி அங்கிருந்து குடியரசுத் தலைவருக்கு சென்று ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். அதனால், இந்த விவகாரம் முதல் நாளே நடந்துள்ளது. இதை தெரிந்து கொண்ட சந்திர பிரியங்கா அடுத்த நாள் ராஜினாமா செய்வது போல் செய்திருக்கிறார்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்