தெலங்கானா மாநில ஆளுநராக இருக்கும், தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் தமிழிசை சௌந்திரராஜனுக்கு கூடுதல் பொறுப்பாக, பாண்டிச்சேரியின் துணை நிலை ஆளுநர் பதவியில் இரு மாதங்களுக்கு முன்பு நியமித்தது மத்திய அரசு. பாண்டிச்சேரியின் ஆளுநர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாளிலிருந்து மக்களோடு மக்களாக இணைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார் டாக்டர் தமிழிசை.
அடிப்படையில் இவர் டாக்டர் என்பதால், கரோனா பரவல் நெருக்கடியிலிருந்து மக்களைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சமீபத்தில் கரோனாவுக்கான தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், மத்திய அரசிடமும், தெலங்கானா மாநில அரசிடமும் கலந்து பேசி, பாண்டிச்சேரிக்கு தேவையான தடுப்பூசிகளை வரவழைத்து, பாண்டிச்சேரி சுகாதாரத் துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.
ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அரசின் பெரிய மருத்துவமனைகள் வரை நேரடியாக ஆய்வுசெய்து, நோயாளிகளின் சிகிச்சை முறைகளைக் கேட்டறிந்ததுடன் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவரிடமும் உரையாடி, “நோயாளிகள் அனைவருக்கும் தரமான சிகிச்சையளிக்க வேண்டும்; சிகிச்சையளிப்பதில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் என் கவனத்துக்கு கொண்டு வாருங்கள். நான் சரி செய்கிறேன்’’ என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும், டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் எதிர்பார்ப்புகளையும், சிரமங்களையும் கேட்டறிந்து அதனையும் சரி செய்துள்ளார்.
ஆளுநர் மாளிகையில் தன்னை சந்திக்கும் மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அதனை உடனடியாக தீர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும் தமிழிசை, பல வருடங்களாக விதவைகள் மற்றும் முதியவர்களுக்கான உதவித்தொகை வழங்கப்படாமல் இருப்பதையறிந்து, அவர்களுக்கான உதவித் தொகையை உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி அந்தப் பணம் விடுவிக்கப்பட்டுப் பலனாளிகளுக்கு கிடைத்து வருகிறது.
இந்த சூழலில், மக்களின் குறைகளைக் கேட்க அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தமிழிசை செல்லும்போது, “அம்மா, நீங்க இங்கேயே இருந்திடுங்கம்மா! தெலங்கானா பக்கமெல்லாம் போக வேணாம்” என்று வலியுறுத்துகிறார்கள். அதைக் கேட்டு சிரித்துக்கொள்கிறார் தமிழிசை! இந்த நிலையில், தமிழிசையின் பணிச் சுமைகளைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் அவருக்கு, ஓய்வுபெற்ற ஐபிஎஸ். அதிகாரியான ராஜஸ்தானைச் சேர்ந்த ஆனந்த்பிரசாத் மகேஷ்வரியையும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான தமிழகத்தைச் சேர்ந்த சந்திரமவுலியையும் ஆலோசகர்களாக நியமித்துள்ளது மத்திய அரசு. சமீபத்தில் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
அவர்கள் இருவரும் கவனிக்க வேண்டிய துறைகளைப் பிரித்துக் கொடுத்துள்ளார் தமிழிசை. எந்த துறைகள் குறித்து தமிழிசைக்கு தகவல்கள் தேவையோ, அதனை சம்மந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளிடம் பேசி, அதனை வாங்கி தமிழிசையிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கிறார்கள் ஆலோசகர்கள். மேலும், மக்களுக்கான அடிப்படை பிரச்சினைகளை சரி செய்வதில் அதிகாரிகள் மெத்தனமாக இருக்கக்கூடாது என்கிற நிலையான உத்தரவை அழுத்தமாக பதிவு செய்துள்ளாராம் தமிழிசை. இதனால், பாண்டிச்சேரியின் தலைமைச் செயலகம் சுறுசுறுப்பாகவே இருக்கிறது என்கின்றன அங்கிருந்து வரும் தகவல்கள். மக்கள் நலனில் அக்கறை காட்டுவதால் பாண்டிச்சேரி மக்களிடம் தமிழிசைக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.