மதுரையைச் சேர்ந்த 27 வயதான ஆபிரகாம் சாமுவேல் அமெரிக்காவில் உள்ள கிளார்க்சன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பிரிவில் பி.ஹெச்டி படித்து வருகிறார். விடுமுறைக்காக சொந்த ஊரான மதுரைக்கு சென்றிருந்த அவர், மீண்டும் அமெரிக்கா செல்வதற்காக கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவு மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். பின்னர், விசா பெறுவதற்காக அங்குள்ள கவுன்ட்டருக்கு சென்ற அவர், குடியுரிமை அதிகாரியிடம் விசா தொடர்பான விவரங்களை ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளார். அதற்கு அந்த அதிகாரி இந்தியில் பதிலளித்துள்ளார். அப்போது, தனக்கு இந்தி தெரியாது எனக் கூறிய சாமுவேல், ஆங்கிலத்தில் பேசுமாறு அதிகாரியிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த அதிகாரி, இந்தி தெரியாவிட்டால் தமிழகத்துக்கே திரும்பி போ என சாமுவேலிடம் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அவருக்கு விசா வழங்கவும் மறுத்துள்ளார். இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக அங்கிருந்த உயரதிகாரிகளிடம் சாமுவேல் புகார் தெரிவித்துள்ளார். அவர்களின் நடவடிக்கையின் பேரில் அவருக்கு உடனடியாக விசா வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் நேற்று பதிவிட்ட சாமுவேல், 'மும்பை சத்ரபதி விமான நிலையத்தில், இந்தி தெரியாது என்பதால் என்னை குடியுரிமை அதிகாரி ஒருவர் அவமதித்தார். இந்தியில் பேசாததற்காக அவர் என்னிடம் நடந்து கொண்ட விதத்தை என்னால் ஏற்க முடியவில்லை. இச்சம்பவம் குறித்து மும்பை விமான நிலைய உயரதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளேன். அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்' என கூறியுள்ளார். அந்த அதிகாரியின் இந்த நடவடிக்கை பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பை பெற்று வருகிறது.