இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்தநிலையில் இன்று காலை மாநிலங்களவை கூடியது.
கரோனா பரவல் காரணமாக, மக்களவை இந்த கூட்டத்தொடர் முழுவதும் மாலையிலேயே கூடுகிறது. இன்று மக்களவையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, '' தமிழக மக்களைப் பாரதிய ஜனதா வாழ்நாளில் ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது. நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை மத்திய அரசால் தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறது. தமிழ்நாடு மனம் தளராமல் மீண்டும் மீண்டும் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு கோரிக்கை வைக்கிறது. ஆனால் மத்திய அரசு அதை ஏற்க மறுத்து விரட்டி அடிக்கிறது. மத்திய அரசின் கொள்கைக்கு எதிரான எந்த குரலும் எழுப்ப முடிவதில்லை. வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் குரல் கொடுக்கக்கூடாது. வெறுமனே ராஜா (பிரதமர்) மட்டுமே குரலெழுப்ப உரிமை இருக்கிறது.
மாநில கூட்டாட்சி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? ஒவ்வொரு மாநிலத்தோடு பேசுவது, பிரச்சனைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவது. தமிழகத்திற்கு நான் சென்றால் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்பேன். இங்கே பணக்கார இந்தியா ஏழை இந்தியா என இரண்டு இந்தியா உள்ளது. ஒரு இந்தியாவில் செல்வந்தர்களும், மற்றொரு இந்தியாவில் ஏழைகளும் இருக்கிறார்கள். வேலைவாய்ப்பின்மை குறித்து குடியரசுத் தலைவரின் உரையில் ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை. இளைஞர்களில் ஒருவருக்குக்கூட மத்திய அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவில்லை'' என ஆவேசமாக பேசினார்.