பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக அண்மையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியாகியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு வீடியோக்கள் வெளியாகின. இதனிடையே பீகாரில் இருந்து வந்த குழு ஒன்று இங்கு வெளிமாநிலத் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் பாதுகாப்பைப் பற்றி கேட்டறிந்தது. மேலும், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தது.
தமிழ்நாடு காவல்துறை, வெளிமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்களை பதிவிட்டவர்களை சைபர் க்ரைம் பிரிவினருடன் இணைந்து கண்டறிந்து கைது செய்து வந்தது. அதேபோல், பீகார் அரசும் போலி வீடியோக்கள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுத்து வந்தது.
தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி வீடியோ பரப்பிய வழக்கில் தேடப்பட்டு வந்த யூடியூபர் மணீஷ் காஷ்யப், பீகார் மாநிலம் ஜகதீஷ்பூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். சினிமா ஷூட்டிங் போல் செட் அமைத்து வடமாநிலத்தவர்கள் தாக்கப்பட்டது போல் நடிக்க வைத்து வீடியோ காட்சிகளைப் பதிவு செய்து பரப்பியது அம்பலமாகியது. இந்நிலையில் யூடியூபர் மணீஷ் காஷ்யப்பை கைது செய்ய தமிழக காவல்துறை கைது வாரண்ட் பிறப்பித்ததை அடுத்து அவரை கைது செய்ய தமிழக தனிப்படை போலீசார் பீகார் விரைந்துள்ளனர். பீகார் சிறையில் உள்ள யூடியூபர் மணீஷ் காஷ்யப்பை மதுரை கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தமிழக போலீசார் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.