அசாம் மாநிலம் கவுஹாத்தி பாஜக எம்.எல்.ஏ தாஜ்மஹால் காதலுக்கான சின்னம் இல்லை, அதை இடிக்க வேண்டும் என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்.சி.இ.ஆர்.டி அதன் புதிய பாடப்புத்தகங்களில் (12 ஆம் வகுப்பு) முகலாய சாம்ராஜ்ஜியத்தைப் பற்றி சுருக்கப்பட்ட உள்ளடக்கத்துடன் வெளியிட்ட நிலையில், அந்த வரலாற்றுப் பகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. தொடர்ந்து அப்பகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு கண்டங்கள் எழுந்த நிலையில் என்.சி.இ.ஆர்.டி தலைவர் அப்பகுதிகள் நீக்கம் செய்யப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் அசாம் மாநிலத்தில் உள்ள பாஜக எம்.எல்.ஏ ருப்ஜோதி குர்மி இது குறித்து கூறும் போது, “முகலாய மன்னர் ஜஹாங்கீர் 20 முறை திருமணம் செய்து கொண்டார். மற்றொரு மன்னரான ஷாஜஹான் 4 திருமணம் செய்து கொண்டு காதலுக்கு நினைவுச் சின்னம் எழுப்பினார் என்பதை சிறு குழந்தைகளுக்கு நாங்கள் கற்றுத்தர விரும்பவில்லை. வரும் தலைமுறையினருக்கு இதுபோன்ற தகவல்களை வழங்க நாங்கள் விரும்பவில்லை. இப்போது முகலாயர்களின் உள்ளடக்கத்தை குறைக்க NCERT முடிவு செய்துள்ளது. நாங்கள் அதை ஆதரிக்கிறோம்.
முகலாயர்கள் இந்தியாவிற்கு வந்து 1526 ஆம் ஆண்டு தாஜ்மஹாலை உருவாக்கினர். ஷாஜகான் தாஜ்மஹாலை இந்து மன்னர்களிடம் இருந்து எடுத்த பணத்தில் கட்டினார். அது நமது பணம். அவர் தனது நான்காவது மனைவிக்காக தாஜ்மஹாலை உருவாக்கினார். அவருக்கு ஏழு மனைவிகள் மற்றும் மும்தாஜ் நான்காவது மனைவி. அவர் மும்தாஜை மிகவும் நேசித்திருந்தால் பின்னர் ஏன் மேலும் மனைவிகளை திருமணம் செய்தார்?
முகலாயர்கள் தாஜ்மஹாலையும் குதுப்மினாரையும் கட்டினார்கள். தாஜ்மஹால் மற்றும் குதுப்மினார் உடனடியாக இடிக்கப்பட வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்துகிறேன். இந்த இரண்டு நினைவுச் சின்னங்களுக்குப் பதிலாக உலகின் மிக அழகான கோயில்கள் கட்டப்பட வேண்டும். அந்த இரண்டு கோயில்களின் கட்டடக்கலை வேறு எந்த நினைவுச்சின்னங்களும் அவற்றை நெருங்க முடியாத வகையில் இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். பாஜக எம்.எல்.ஏவின் இந்த கருத்துக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.