கடந்த 2023ஆம் ஆண்டு சென்னையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இவரது பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மீதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து உதயநிதி ஸ்டாலிக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. இதனையடுத்து, இந்த வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு ஒரே வழக்காக மாற்றி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (04-03-24) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘சனாதனம் தொடர்பாக நீங்கள் சொன்ன கருத்துக்களின் விளைவுகள் என்ன என்பது உங்களுக்கு தெரியாதா? நீங்கள் ஒன்றும் சாமானியர் அல்ல, அமைச்சர். ஒரு அமைச்சராக இருந்து தனது சொற்களில் கவனமாக இருக்க வேண்டும். சொல்லும் கருத்துக்களின் விளைவுகளை அறிந்திருக்க வேண்டும். கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி விட்டு தற்போது பாதுகாப்பு கோரி நீதிமன்றம் வந்துள்ளீர்கள்’ என்று கருத்து தெரிவித்தனர்.
இதனையடுத்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘நான் பேசியதன் விளைவை நன்கு அறிவேன். சனாதன தர்மம் தொடர்பாக நான் கூறிய கருத்து தொடர்பான வழக்கை எதிர்க்கொள்ள மாட்டேன் என்று நான் சொல்லவில்லை. 6 மாநிலங்களில் வெவ்வேறு உயர்நீதிமன்றங்களில், வழக்குகள் உள்ளன. என்னால் எல்லா மாநிலங்களுக்கும் செல்ல முடியாது. அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்று தான் கேட்கிறேன். அனைத்து முதல் தகவல் அறிக்கைகளும் ஒரே இடத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே, விசாரணையை எதிர்கொள்ள நான் தயார்’ என்று தெரிவித்தார். இதனையடுத்து, இது தொடர்பான விசாரணை அடுத்த வாரத்தில் நடைபெறும் எனக் கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.