உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17 ஆம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில் பல முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பளிக்க திட்டமிட்டுள்ளார்.
அந்த வகையில் ஏற்கனவே அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த நிலையில், இன்று கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கிலும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் ராகுல் காந்தி மீதான ஒரு வழக்கில் நாளை தீர்ப்பளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது, ரஃபேல் போா் விமான ஒப்பந்த விவகாரத்தில் நாட்டின் பாதுகாவலரே (பிரதமா் மோடி) திருடன் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறியிருந்தாா்.
இவ்வாறு கூறியதற்காக, ராகுல் மீது பாஜக எம்.பி. மீனாட்சி லேகி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இதனையடுத்து ராகுல் காந்தி தனது கருத்துக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய பிறகும், மீனாட்சி லேகி வழக்கை திரும்ப பெறவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கில் ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமா்வு நாளை (வியாழக்கிழமை) தீா்ப்பளிக்கவுள்ளது.