2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டம் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் விசாரணை நடத்திய நிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் முன்னாள் கிரிக்கெட் வீரராக இருந்த தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஐபிஎஸ் அதிகாரி, அங்கும் தோனி மீது அதே குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இதில் தன்னுடைய பெயருக்குக் களங்கம் ஏற்பட்டதாகக் கிரிக்கெட் வீரர் தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், சுந்தர் மோகன் அமர்வில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை அளித்து உத்தரவிட்டனர். அப்போது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சம்பத்குமார் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள், மேல்முறையீடு செய்ய வசதியாகத் தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், சம்பத்குமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த மனு தொடர்பாக கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பத்குமாருக்கு விதிக்கப்பட்ட 15 நாள் சிறைத் தண்டனைக்கும் தடை விதித்துள்ளது.