நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இத்தகைய சூழலில் ரூ.1,823 கோடி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 135 கோடியை ஏற்கெனவே வருமான வரித்துறை முடக்கியுள்ள நிலையில், அடுத்தகட்டமாக ரூ. 1823.08 கோடி அபராதம் கட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு மற்றொரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கடந்த 1993 - 94, 2016 - 17, 2017 - 18, 2018 - 19 மற்றும் 2019 - 20 காலகட்டத்திற்கு உரிய வருமான வரி மற்றும் அதற்குரிய அபராதத்தை செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
அதே சமயம் வருமான வரி கணக்கை மறு மதிப்பீடு செய்ய தடைகோரி காங்கிரஸ் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2014 - 15 நிதியாண்டு முதல் 2016 -17 நிதியாண்டு வரை ரூ. 1745 கோடி வருமான வரி பாக்கி இருப்பதாக புதிய நோட்டீஸை அனுப்பியது. இதனையடுத்து வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை காங்கிரஸ் கட்சி நாடியது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (01.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிடுகையில், “காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூ. 1700 கோடி வசூல் செய்வதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கமாட்டோம்” என உறுதியளித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளுக்கு எதிராக கெடுபிடி நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது” என வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜூலைக்கு ஒத்திவைக்கப்பட்டது.