தகுதிகாண் காலத்தின் போது சிறப்பாக செயல்படவில்லை என்று கூறி மத்தியப் பிரதேச நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த, கர்ப்பிணியான அதிதி குமார் சர்மா உள்பட 6 பெண் நீதிபதிகள் பணி நீக்கம் செய்து, கடந்த 2023ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. தகுதிகாண் காலத்தின் போது நீதிபதிகளின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை எனக் கண்டறிந்த நிர்வாகக் குழு மற்றும் முழு நீதிமன்றக் கூட்டத்தைத் தொடர்ந்து, மாநில சட்டத் துறை அவர்களின் சேவைகளை நிறுத்துவதற்கான உத்தரவுகளை பிறப்பித்தது.
இந்த உத்தரவிக்கு பிறகு, அதிதி குமார் சர்மா கரு கலைந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்த விவகாரத்தை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்துகொண்டது. இதற்கிடையில், கடந்த 2019-2020 காலகட்டத்தில் மிக சிறந்த மற்றும் சிறந்த என்ற விகித்ததில் இருந்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் சராசரி மற்றும் மோசம் என அதிதி குமார் சர்மாவின் செயல்பாடு இருப்பதாக நீதிமன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவில் நீதிபதிகளை பணிநீக்கம் செய்வதற்கான அளவுகோல்கள் குறித்து உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டது. இதனையடுத்து நீதிபதி பி.வி.நாகரத்னா கூறியதாவது, “ஆண் நீதிபதிகளுக்கும் இதுபோன்ற அளவுகோல்கள் விதிக்கப்பட வேண்டும் என்று நம்புகிறேன். இதைச் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
அந்த பெண் கர்ப்பமாகி இருந்திருக்கிறார். கருச்சிதைவும் அடைந்துள்ளது. கருச்சிதைவுக்கு ஆளான ஒரு பெண்ணின் மன மற்றும் உடல் அளவில் அவர் அதிர்ச்சியில் இருந்திருப்பார். ஆண்களுக்கு மாதவிடாய் ஏற்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்போது தான் அது என்னவென்று தெரிந்துகொள்வார்கள்” என்று ஆவேசமாக கூறினார்.