நாடு முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் அதிகரித்துவருகிறது. இப்படி பேசுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஷாஹீன் அப்துல்லா எனும் பத்திரிகையாளர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
சமீபத்தில் பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா இஸ்லாமியர்களின் இறை தூதரான நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார். உலகம் முழுக்க கொரோனாவால் நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தபோது, தப்லிக் ஜமாத் எனும் அமைப்பு இந்தியாவில் கொரோனாவை பரப்பியதாக சர்ச்சைகள் கிளப்பப்பட்டன. அதேபோல் சமீபத்தில், பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்கள் தங்கள் மத நம்பிக்கையாக பின்பற்றிவரும் பெண்கள் ஹிஜாப் அணிவதை கல்வி நிறுவனங்களில் அனுமதி அளிக்கக்கூடாது எனும் விவகாரத்தை கிளப்பி அது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ஷாஹீன் அப்துல்லா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நாடு முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் அதிகரித்து வருகிறது. இப்படி பேசுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவரின் மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம். ஜோசப், ரிஷிகேஷ் ராய் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், ‘இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சும், வன்முறையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் உபயோகிக்க வேண்டும் என்று வாதிட்டார். மேலும், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் வெறுப்பு பேச்சுகளை முன்கூட்டியே தடுப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதன் காரணமாகவே தற்போது மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், "நாம் 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அறிவியல் ரீதியாக எதையும் அணுகாமல் மதம் எனும் பெயரில் நாம் எங்கு செல்கிறோம். பல்வேறு மதங்களை ஏற்றுக்கொண்டுள்ள நாட்டில் வெறுப்பைத் தூண்டும் மதவாத பேச்சுகள் கவலை அளிக்கின்றன. வெறுப்பைத் தூண்டும் பேச்சுகள் தொடர்பாக புகார் வரும் வரை காத்திருக்காமல் காவல்துறை மற்றும் மாநில அரசுகள் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
அடிப்படை உரிமைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாக்க வேண்டிய கடமை நீதிமன்றத்திற்கு உள்ளது. வெறுப்புப் பேச்சுகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் காவல்துறை டி.ஜி.பி.க்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர். மேலும், ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் இந்த வழக்கும் சேர்த்து வேறு அமர்வால் விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்.