ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கூறி வருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரஃபேல் வழக்கில் ஊழல் நடைபெறவில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
இருப்பினும், சமீபத்தில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக இடைத்தரகருக்கு ரூ. 9 கோடி கமிஷன் கொடுக்கப்பட்டதாக ஃபிரெஞ்சு செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வௌியிட்டது. இதனையடுத்து, ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பது உறுதியாகியுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்தது. இதுகுறித்து பிரதமர் நாட்டிற்குப் பதிலளிப்பாரா எனவும் காங்கிரஸ் கேள்வியெழுப்பியது.
இதனை, ஆதாரமற்ற குற்றச்சாட்டு என பாஜக மறுத்தது. தொடர்ந்து ரஃபேல் விமானங்களை இந்தியாவிற்கு உற்பத்தி செய்யும் டாசல்ட் ஏவியேஷன் நிறுவனமும் குற்றச்சாட்டுகளை மறுத்தது. இந்தநிலையில், இப்புதிய குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, ரஃபேல் விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை வேண்டுமென வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்சநீதிமன்றதில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்குப் பிறகு விசாரிப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.