/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/manishni.jpg)
டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரியில் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாக கைது செய்தது.
இதனை தொடர்ந்து, டெல்லி சிபிஐ நீதிமன்றம், மணீஷ் சிசோடியாவுக்கு சிறை விதித்து கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, இது தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அதனை தொடர்ந்து, இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் கடந்த மே 10ஆம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை மட்டுமே இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதாக அறிவித்த உச்சநீதிமன்றம், ஜூன் 2 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டதால், ஜூன் 2ஆம் தேதி, அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைந்தார்.
இந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஜாமீன் வேண்டி மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான ஜாமீன் மனுவை நீதிபதிகள் பி.ஆர் கவாய், விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, ‘வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை விரைந்து முடிப்பதற்கான வாய்ப்பு துளிகூட தெரியவில்லை. 400க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரிக்க வேண்டிய நிலையில், இப்போது வழக்கு முடியாது என்பது தெளிவாகிறது. வழக்கு விசாரணை தாமதம் ஆவதற்கு மணீஷ் சிசோடியாவ குற்றம் சொல்ல முடியாது.
அதே போல், ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய அனுமதி கோரி சிசோடியா மனுத் தாக்கல் செய்தது தவறு என கூறவும் முடியாது. வழக்கு விசாரணையில் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்ய கோருவதற்கு மனுதாரருக்கு உரிமை உள்ளது. மணீஷ் சிசோடியாவை மீண்டும் விசாரணை நீதிமன்றம் செல்ல உத்தரவிடுவது பரமபத விளையாட்டு போல் ஆகிவிடும். தனிமனித உரிமைக்காக போராடுபவரை அங்கும் இங்கும் அலைக்கழிக்கக்கூடாது’ எனத் தெரிவித்து மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து விரைவில் சிறையில் இருந்து விடுதலையாகவுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)