Skip to main content

சோனியா காந்திக்கு மீண்டும் சம்மன்-அமலாக்கத்துறை அதிரடி!

Published on 11/07/2022 | Edited on 11/07/2022

 

 Summons again to Sonia Gandhi-Executive Department action!

 


நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பாக அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் செயல் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

 

இது தொடர்பாக பலமுறை ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி இருந்த நிலையில் சோனியா காந்தி கரோனா காரணமாக சிகிச்சை பெற்று வந்ததால் ஆஜராக முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் சோனியா காந்தி தரப்பில் ஆஜராவதற்கு நேரம் கேட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை சோனியா காந்திக்கும் மீண்டும் இதுதொடர்பாக சம்மன் அனுப்பியுள்ளது. அதில் வரும் 21 ஆம் தேதி சோனியா காந்தி நேரில் ஆஜராக வேண்டும் எனச் சம்மனில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சோனியா காந்தி உருவப் படத்தை எரித்தவரை வேட்பாளராக அறிவித்த காங்கிரஸ்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Congress has announced candidate sudha ramakrishnan who fire Sonia Gandhi portrait

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளரை நீண்ட இழுபறிக்குப் பிறகு தொகுதிக்கு தொடர்பில்லாதவரை அறிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது காங்கிரஸ் தலைமை.

நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக என நான்கு முனை போட்டிகள் நிலவுகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, வேட்பாளர் அறிமுகக் கூட்டம், வேட்புமனு தாக்கல், பிரச்சாரம், விஐபிக்களை சந்திப்பது எனத் தேர்தல் களம் அனலாகத் தகிக்கிறது. திமுக ஒருபடி மேலே சென்று வேட்பாளர்களை அறிவித்த கையோடு தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டது.

ஆனால் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலேயே இழுபறிக்கு ஆளாகியது. மயிலாடுதுறை தொகுதிக்கான வேட்பாளரை வேட்பு மனு கடைசி நாளுக்கு முதல் நாள் வரை வேட்பாளர் அறிவிக்காமல் இழுத்தடித்து வந்தது.

இந்த நிலையில், மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மகிளா காங்கிரஸ் சுதா ராமகிருஷ்ணன் என்பவரை அறிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்கு ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரான பிரவீன் சக்கரவர்த்திக்குதான் சீட், அவர்தான் வெற்றி வேட்பாளர் என பிரபலப்படுத்தப்பட்டிருந்தது. அதேபோல் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், சிட்டிங் திருச்சி எம்பியுமான திருநாவுக்கரசுவுக்கு திருச்சி தொகுதி இல்லை என்றதும் மயிலாடுதுறை தொகுதியை வழங்கலாம் எனப் பரவலாக பேசப்பட்டு வந்தது. அதேபோல மூன்று முறை மயிலாடுதுறை எம்பியாகவும் மத்திய அமைச்சராக இருந்த மணிசங்கர் ஐயர் தனக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு வழங்க வேண்டுமென தலைமையில் மன்றாடி வந்தார். இந்த மூவரில் ஒருவருக்குத்தான் சீட் எனக் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் பேசப்பட்டு வந்தது. காங்கிரஸ் தலைமையோ வேட்பாளரைத் தேர்வு செய்வதில் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தது.

ad

இந்த சூழலில், கடலூர் தொகுதியில் சீட்டு கேட்டு வந்த சுதா ராமகிருஷ்ணனை மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.

மயிலாடுதுறை தொகுதியில் அதிமுக சார்பில், அதிமுகவின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பவுன்ராஜியின் மகன் பாபு என்பவர் போட்டியிடுகிறார். அதேபோல பாரதிய ஜனதா கூட்டணியில் பாமகவை சேர்ந்த ம.க. ஸ்டாலின் என்பவர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் முதல் ஆளாகக் களத்திற்கு வந்து சின்னமே இல்லாமல் பாதி பிரச்சாரத்தை முடித்துவிட்டார். இந்த சூழலில் காங்கிரஸ் வேட்பாளராக சுதா ராமகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

Congress has announced candidate sudha ramakrishnan who fire Sonia Gandhi portrait

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் சுதா ராமகிருஷ்ணன். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தமிழக மகிளா காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜூடோ யாத்திரை முழுவதும் ராகுல் காந்தியுடன் சுதா ராமகிருஷ்ணன் நடந்து சென்றவர். அதோடு  இலங்கையில் உச்சக்கட்ட போர் நடைபெற்ற பொழுது, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முழக்கம் எழுப்பியதோடு சோனியாவின் உருவப்படம் எரிக்கும் போராட்டத்தில் பங்கேற்று காங்கிரஸ் தலைமையின் கண்டிப்புக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதி திமுக, காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தாலும் தற்போது தொகுதிக்கு சற்றும் தொடர்பு இல்லாத ஒரு நபரை அறிவித்திருப்பது திமுகவினரை சோர்வடையவே செய்துள்ளது. ஏற்கனவே மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் என்பதால் தொடர்ந்து சொந்த கட்சிக்கு வேலை செய்ய முடியாமல் கூட்டணிக் கட்சிக்காகவே வேலை செய்யும் நிலைமை இருக்கிறது. இரண்டரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் சிட்டிங் திமுக எம்.பி. ராமலிங்கம் வெற்றி பெற்ற இந்தத் தொகுதியில்  இம்முறை சற்று கடினமானது என்கிறார்கள் அரசியல் அறிந்தவர்கள்.

Next Story

“யாத்திரைக்கு எதிராக பொய் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டன” - ராகுல் காந்தி 

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 16 ஆம் தேதி மணிப்பூரில் துவங்கினார். இந்த யாத்திரை மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக நடைபெற்றது. இதனையடுத்து மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சைத்ய பூமியில் இன்று (17.03.2024) நிறைவு செய்யப்பட்டது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிறைவு விழாவில் காங்கிரஸ் கட்சியின் அழைப்பின் பேரில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அதன்படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் இந்த நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதனையொட்டி ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் இந்தியா கூட்டணியின் மற்ற தலைவர்கள் மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள பாலாசாகேப் தாக்கரேவுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் சத்ரபதி சிவாஜியின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “உத்தரப் பிரதேசத்தில் மார்ச் 20 முதல் வேட்புமனு தாக்கல் செய்யும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, இதன் காரணமாக நான் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது” என்று கூறப்பட்டிருந்தது.

“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

இந்நிலையில் இந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், “யாத்திரையின் போது அனைத்து தரப்பு மக்களின் பிரச்சனைகளையும் அறிந்து கொண்டேன். இந்த யாத்திரை பயணத்தில் பார்த்த அனைத்தையும் ஒரே மேடையில் பேசிவிட முடியாது. இந்த யாத்திரையை முடக்க மத்திய அரசு சார்பில் அனைத்து துறைகளும் முடுக்கி விடப்பட்டன. இந்த யாத்திரைக்கு எதிராக சமூக ஊடகங்களில் பொய் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டன. நாம் ஒரு அரசியல் கட்சிகளுக்கு எதிராகத்தான் போராடுகிறோம் என்கிறார்கள். அது உண்மை அல்ல. இந்து தர்மத்தில் அதிகார மையம் என்ற வார்த்தை உண்டு. நாங்கள் அதற்கு எதிராகத் தான் போராடுகிறோம். அது என்ன அதிகார மையம் என்பது தான் கேள்வி. மணிப்பூரில் மோதலை ஏற்படுத்தியது அந்த அதிகார மையம் தான். அதுதான் நம் நாட்டையும் சீர் குலைக்க முயற்சிக்கிறது. பா.ஜ.க.வால் இந்தியாவில் எந்தவொரு இடத்திலும் சர்வதேச விமான நிலையம் அமைக்க முடியவில்லை. ஆனால் ஒரு திருமணத்துக்காக பத்தே நாட்களில் சர்வதேச விமான நிலையத்தை உருவாக்கினார்கள்” எனப் பேசினார்.

முன்னதாக இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், “இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை வெற்றிகரமாக நிறைவு செய்த ராகுல் காந்திக்கு எனது வாழ்த்துகள். மும்பையை அடைந்துள்ள இந்தியா கூட்டணி விரைவில் டெல்லியை அடையும். நாடாளுமன்ற மக்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், அவர் உச்சநீதிமன்றம் வரை சென்று வென்றார். மக்களை பிரித்தாளும் பா.ஜ.க.வை விரைவில் ஆட்சியில் இருந்து அகற்றுவோம். பா.ஜ.க.வின் பிரித்தாளும் சூழ்ச்சி, பொய் பிரச்சாரம் ஆகியவற்றை இந்தியா கூட்டணி விரைவில் முறியடிக்கும்.

“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

இந்தியா கூட்டணியால் அச்சமடைந்துள்ள பிரதமர் மோடி, இந்த கூட்டணிக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்தார். தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க.வின் ஊழல் முகம் அம்பலமாகியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் பா.ஜ.க. ரூ. 8 ஆயிரத்து 250 கோடியை குவித்துள்ளது. இந்தியா கூட்டணியின் ஒரே இலக்கு பா.ஜ.க.வை தோற்கடிப்பது தான். பா.ஜ.க.வினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.