/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ke-ni.jpg)
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கடமக்குடி பகுதியைச் சேர்ந்தவர் நிஜோ (39). இவர் கட்டுமானத்துறை சம்பந்தமான பணியில்இருந்துவந்தார். இவருக்குத்திருமணமாகி சில்பா (29) என்ற மனைவியும், ஏய்பன் (7), ஆரோன் (5) என இரண்டு குழந்தைகளையும் உள்ளனர். நிஜோ மற்றும் அவரது குடும்பம் வீட்டின் மாடியில் வசித்து வந்துள்ளார். இவருடைய தம்பிக்கு திருமணமாகி, அவரது குடும்பம் வீட்டின் தரைதளத்தில் வசித்து வந்துள்ளனர். மேலும், நிஜோவின் தாயாரான ஆனி, தம்பி வீட்டில் தான் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு உறங்கச் சென்ற நிஜோவின் குடும்பம் அடுத்த நாள் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த தாயார் ஆனி, நிஜோவின் வீட்டைத்தட்டிப் பார்த்துள்ளார். ஆனால், வீட்டில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. மேலும், நிஜோவின் வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததை உணர்ந்த தாயார் ஆனி, வீட்டின் ஜன்னலில் இருந்து எட்டி பார்த்துள்ளார். அங்கு நிஜோவும், அவரது மனைவியும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளனர். மேலும், அவர்களது இரண்டு குழந்தைகளும் கட்டிலில் உறங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளனர்.
இதைப் பார்த்துஅதிர்ச்சியடைந்த ஆனி, நிஜோவின் தம்பியை அழைத்து காண்பித்துள்ளார். இதனை கண்ட நிஜோவின் தம்பி, காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதை அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்துள்ளனர். வீட்டில் உள்ள சென்ற காவல்துறையினர், உயிரிழந்த நிஜோ, சில்பா மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நிஜோவின் மனைவி சில்பா சில மாதங்களுக்கு முன் வேலை நிமித்தமாக இத்தாலி சென்றுள்ளார். ஆனால், அங்கு சரியான வேலையும், சரியான சம்பளமும் வராததால் அண்மையில் இத்தாலியில் இருந்து கேரளாவுக்கு திரும்பியுள்ளார். இதை தொடர்ந்து, நிஜோவின் குடும்பத்தினருக்கு அதிகமான கடன் தொல்லை இருந்துள்ளது. இதன் காரணமாக தங்களது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, அவர்கள் தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்திற்கு வேறு எதாவது காரணம் இருக்குமா என்று பல்வேறு கோணங்களிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)