தலைநகர் டெல்லியில் காற்று மாசின் அளவு அவ்வப்பொழுது அபாய அளவை எட்டி நடுங்க வைக்கும். இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை தற்பொழுது வரை தொடர்கதையாக உள்ளது. அண்டை மாநிலங்களான ஹரியானா, பஞ்சாப் பகுதிகளில் தீயிட்டு கொளுத்தப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
கடந்த 2022 ஆம் எடுக்கப்பட்ட தரவுகளில் டெல்லியில் காற்று மாசு காரணமாக பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டிருந்து. டெல்லி மருத்துவமனைகளில் சுவாசக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்ந்துள்ளதாக வெளியான தரவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல் ஒவ்வொரு தீபாவளிக்கு பிறகு டெல்லியில் மேலும் காற்று மாசு அதிகரிக்கும். டெல்லியில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான பிரிவிலேயே உள்ளதாக டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அவ்வப்போது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் காற்று மாசை குறைப்பதற்கான மற்றொரு நடவடிக்கையாக நாளை மறுநாள் முதல் டெல்லிக்குள் டீசல் பேருந்துகள் நுழையக்கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் டீசல் பேருந்துகள் டெல்லிக்குள் நுழைய அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிற மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரும் டீசல் பேருந்துகள் எல்லையோடு திரும்பிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.