Skip to main content

வாக்களிக்கத் தயாரான மக்கள்; ரயில்வேயின் திடீர் அறிவிப்பால் அவதி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Suffering from the sudden announcement of the railway for assam People ready to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Suffering from the sudden announcement of the railway for assam People ready to vote

இதற்கிடையில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக அஸ்ஸாமுக்கு மற்றும் அங்கிருந்து செல்லும் பல ரயில்களை ரத்துசெய்து மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக வடகிழக்கு எல்லை ரயில்வே அறிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் அஸ்ஸாமின் 5 தொகுதிகளில் இன்று (26-04-24) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், நேற்று (25-04-24) லும்டிங் பிரிவில் உள்ள ஜதிங்கா லம்பூர் மற்றும் நியூ ஹரங்காஜாவோ நிலையங்களுக்கு இடையே ரயில் தடம் புரண்ட சம்பவத்தின் காரணமாக பல ரயில்களின் நேரத்தை மாற்றியமைத்து ரத்து செய்ததாக வடகிழக்கு எல்லை ரயில்வே அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.

கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு நிமித்தமாக பிற மாநிலங்களுக்கு சென்று வாழும் அஸ்ஸாமிய மக்கள் இன்று ஓட்டு போடுவதற்காக தங்கள் சொந்த மாநிலமான அஸ்ஸாம் நோக்கி வர வார இறுதி விடுமுறையில் கிளம்ப இருந்த நேரத்தில் நேற்று (25-04-24) மாலை திடீரென்று அஸ்ஸாம் செல்லும் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரயில்வேயின் இந்த திடீர் அறிவிப்பால், பொதுமக்கள் பலரும் அவதியடைந்து வருகின்றனர். இதுபோன்ற முக்கியமான நாளில் வாக்காளர்கள், வாக்குச் சாவடிகளுக்குச் செல்வதைத் தடுக்கும் முயற்சியில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்த அறிவிப்புக்கு பின்னால் பா.ஜ.க.வின் சதி இருப்பதாகவும் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“இஸ்லாமியர்களின் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை” - அசாம் முதல்வரின் சர்ச்சை பேச்சு

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Controversial speech of Assam Chief Minister about islam people

அசாம் மாநிலத்தில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் அவ்வப்போது, இஸ்லாமியர்கள் அவதூறாகவும், கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் அதிக பெரும்பான்மை மக்களாக இஸ்லாமிய மக்கள் இருக்கிறார்கள் என்று கூறியது சர்ச்சையாக மாறியுள்ளது. 

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, “2041-க்குள் அசாம், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலமாக மாறும். இது நிஜம், யாராலும் தடுக்க முடியாது. மாநிலத்தில் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் இஸ்லாமிய மக்கள் தொகை சுமார் 30 சதவீதம் அதிகரித்து வருகிறது. புள்ளிவிவர மாதிரியின்படி அசாமின் மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் இப்போது 40 சதவீதமாகிவிட்டனர். எனது அரசாங்கம் இஸ்லாமியர்கள் மத்தியில் மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆனால், ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் இந்து சமூகத்தின் மக்கள்தொகை சுமார் 16 சதவீதம் அதிகரித்து வருகிறது. இஸ்லாமியர்களின் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் காங்கிரஸுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. ராகுல் காந்தி மக்கள் தொகைக் கட்டுப்பாட்டின் பிராண்ட் அம்பாசிடராக மாறினால், அவர் சொல்வதை மட்டுமே கேட்கும் சமூகத்தினரை அது கட்டுப்படுத்தும். மாநிலத்தின் மக்கள்தொகையில் ஏற்பட்ட மாற்றம் ஒரு பெரிய பிரச்சினை. நாம் பல மாவட்டங்களை இழந்துள்ளோம். இது எனக்கு அரசியல் பிரச்சினை அல்ல. இது எனக்கு வாழ்வா? சாவா? பிரச்சனை” எனப் பேசினார். இஸ்லாமியர்களின் மக்கள் தொகை குறித்து பா.ஜ.க முதல்வர் பேசியிருப்பது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.

Next Story

ஓடும் ரயில் மீது மது பாட்டில்கள் வீச்சு; பயணிகள் அச்சம்

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
Throwing liquor bottles on a moving train; Passengers fear

ஓடும் ரயில்  மீது மது பாட்டில்கள் வீசப்பட்ட சம்பவம் சென்னையில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மறைமலைநகர் பகுதியில் ரயில் மீது மர்ம நபர்கள் மது பாட்டில் வீசியதாக பயணிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். எழும்பூரில் இருந்து புறப்பட்ட பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்மநபர்கள் குடிபோதையில் மதுபாட்டில்களை வீசியதாக கூறப்படுகிறது. இதுபோன்று  ரயில் மீது மது பாட்டில்கள் வீசப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக பயணிகள் குற்றச்சாட்டுகளை வைத்திருந்த நிலையில் இன்று நடைபெற்ற சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.