ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இரண்டு பயணிகள் இரயில் மற்றும் ஒரு சரக்கு இரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த ரயில் விபத்தில் 288 பேர் இறந்துள்ளதாக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துயரமான இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். இந்த விபத்திற்குப் பொறுப்பேற்று இந்திய ரயில்வே துறை அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் பரிந்துரை செய்தது. இதையடுத்து ரயில் விபத்து குறித்து முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு ஒடிசாவின் பர்கார் பகுதியில் சுண்ணாம்புக் கல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் வனப் பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த நிலையில், தற்போது ஒடிசாவில் பயணிகள் விரைவு ரயிலில் சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டது. நேற்று மாலை துர்க் - பூரி விரைவு ரயில் ஒடிசாவின் நௌபாடா மாவட்டத்தில் துர்க் - பூரி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிக்குள் ஏற்பட்ட சிறிய அளவிலான தீ விபத்து பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. இதனால் பதற்றத்தில் பயணிகள் ரயிலை விட்டு இறங்கினார்கள். ஒடிசாவின் காரியார் சாலை ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது ரயிலின் பி3 பெட்டியில் புகை இருப்பது கண்டறியப்பட்டது.
விரைவாகச் செயல்பட்ட ரயில்வே அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்குள் இந்த சிக்கலை சரி செய்தனர். இதனைத் தொடர்ந்து இரவு 11 மணிக்கு ரயில் புறப்பட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட ரயில்வேயின் அறிக்கையில், "உராய்வு மற்றும் பிரேக் முழுமையடையாததால் பிரேக் பேடுகள் தீப்பிடித்தன. இந்த தீ பிரேக் பேடுகளில் மட்டுமே இருந்தது. இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.