![student photos of manipur issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/sXNCUoUi4Ha8JEWlKMj4tq2C-q4nDx6jImdw38U665w/1695706861/sites/default/files/inline-images/WhatsApp%20Image%202023-08-11%20at%204.29.59%20PM_13.jpeg)
மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரங் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால், பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினார்கள். மேலும், 60,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
இதற்கிடையில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர்கள் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, அந்த மாநிலத்தில் வன்முறை குறைகிறது என்று மாநில அரசு அவ்வப்போது கூறி வந்தாலும் அங்கு சில பகுதிகளில் வன்முறை நடந்த வண்ணம் தான் இருந்தது.
அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு கான்போபி மாவட்டத்தில் மர்ம நபர்கள் சிலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் பலியானார்கள். இதையடுத்து, அடுத்த நாளே சுராந்தபூர் மாவட்டத்தில் மர்ம நபர்கள் கொண்ட தாக்குதலில் துணைக் காவல் ஆய்வாளர் ஒருவர் பலியானார். இந்த நிலையில், கலவரம் காரணமாக கடந்த 4 மாதங்களாக நிறுத்தப்பட்ட இணைய சேவை, சமீபத்தில் மீண்டும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் காணாமல் போன இரு மாணவர்களின் சடலங்களின் புகைப்படம் சமூக வலைthதளங்களில் வெளியானதால் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது. இது தொடர்பாக துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றவாளிகளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் மணிப்பூர் மாநில அரசு உறுதியளித்துள்ளது.
இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “ இணைய சேவை பயன்பாட்டுக்கு வந்த பின்னர் இரு மாணவர்களின் சடலங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. மேலும், ஜூலை மாதம் காணாமல் போன அந்த மாணவர்கள் ஹேம்ஜித் (20), மற்றும் லிந்தோய்ங்கம்பி (17) என அடையாளம் காணப்பட்டுள்ளது. மாநில மக்களின் விருப்பப்படி இந்த வழக்கு ஏற்கனவே சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இரண்டு மாணவர்களை கொலை செய்த குற்றவாளிகளைப் பிடிக்க பாதுகாப்பு துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த கொடுங்குற்றம் செய்தவர்களுக்கு எதிராக தீர்க்கமான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மணிப்பூர் மாநில அரசு, பொதுமக்களுக்கு உறுதியளிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.